முழு தளத்தையும் தமிழில் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இந்தப் பக்கத்தில் கீழ்க்கண்டவை பற்றிய தகவல்கள் உள்ளன:
- பதின்ம வயதினருடன் பேசுதல் மற்றும் உரையாடல்களுக்கான ஆதாரவளங்கள்.
- பெற்றோர் மற்றும் கவனிப்பாளர்களுக்கான உதவிக் குறிப்புகள்.
- குறைந்த வயதில் மது, மரியுவானா, இதர போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகள்.
- ஆரோக்கியமான வழக்கங்களை இணைந்து உருவாக்குதல்.
- எங்கே ஆதரவு பெறுவது.
போதைப் பொருட்களைப் பற்றி உங்கள் பதின்ம வயதினர் எடுக்கும் முடிவுகளில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் நீங்கள்தான்.
நண்பர்களை விட, பிரபலங்களை விட நீங்கள் முக்கியம். அதனால்தான் மரியுவானா, மது அல்லது பிற போதைப்பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது பற்றி பதின்ம வயதினர் உங்களிடமிருந்து கேட்டறிவது முக்கியம்; மேலும் கடினமான காலங்களை சமாளிக்க ஆரோக்கியமான வழிகளைக் கண்டறிவது உட்பட ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்ய கற்றுக்கொள்வதும் அவசியம்.
பதின்ம வயதினருடன் இந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவது சவாலாக இருக்கலாம்; ஆனால், நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காட்டவும், எதிர்பார்ப்புகளை அமைக்கவும், அவர்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுவதற்கும் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உங்கள் பதின்ம வயதினருடன் நேரம் செலவிடும்போது உரையாடல்கள் இயல்பானதாக, குறுகிய நேர அரட்டையாக இருக்கலாம். மது மற்றும் மரியுவானா பற்றி உங்கள் பிள்ளை கேட்கக்கூடிய கேள்விகளுக்கான பதில்களின் பட்டியல் இங்கே உள்ளது, இந்த உரையாடல்களுக்குத் தயாராவதற்கு இது உங்களுக்கு உதவும். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, எனவே உங்கள் சொந்தக் கருத்துகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் உங்கள் பதில்களை வடிவமைக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிநேகமான மற்றும் நேர்மையான உரையாடல் இன்னும் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்கள் பதின்ம வயதினருடன் பேச உதவக்கூடிய கூடுதல் ஆதாரவளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- நல்ல பயன்தரும் உரையாடல்களுக்கான உதவிக் குறிப்புகள்
- பதின்ம வயதினர் மற்றும் மரியுவானா பற்றிய தகவல்கள் தாள்
- பெற்றோருக்கான எளிய உதவிக் குறிப்புகளுடன் ஒரு விளக்கப்படம் (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மட்டும்)
- போதைப் பழக்கமற்ற குழந்தைகளாக வளர்க்க பெற்றோருக்கான வழிகாட்டி (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மட்டும்)
- குழந்தையின் வயதுப் பிரிவுக்கு ஏற்ப உரையாடலைத் துவக்க வழிகாட்டிகள் (இயந்திர மொழியாக்கம் செய்யும் வலைப்பக்கம்)
- வேடிக்கை செயல்பாடுகளில் ஈடுபடுத்த ‘உண்மையா அல்லது சவாலா’ எனும் விளையாட்டு (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மட்டும்)
பெற்றோர்கள் மற்றும் கவனிப்பாளர்களுக்கான உதவிக் குறிப்புகள்.
உங்கள் பதின்ம வயதினருடன் நேரம் செலவிடுங்கள், அடிக்கடி உரையாடுங்கள், வேடிக்கையான செயல்களை இணைந்து செய்யுங்கள்!
பதின்ம வயதினருடன் நீங்கள் அன்பாக இருப்பது, எல்லைகளை வகுப்பது, மற்றும் கண்காணிப்பதன் மூலம் மரியுவானா, மது அல்லது இதர போதைப் பொருட்களைத் தவிர்க்க உதவ முடியும்.
நெருக்கமான பிணைப்பை உருவாக்குக.
பதின்ம வயதினரின் வாழ்வில் அவர்களது பெற்றோர் மற்றும்/அல்லது கவனிப்பாளர்கள் ஈடுபட்டிருந்தால், நெருக்கமாக உணர்ந்தால், அவர்கள் மது அருந்தவோ மரியுவானா அல்லது இதர போதைப் பொருட்களைப் பயன்படுத்தவோ வாய்ப்புகள் குறைவு. குடும்பப் பிணைப்பை மேம்படுத்த:
- ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேச உங்கள் குழந்தைக்காக தினமும் குறைந்தது 15 நிமிடம் ஒதுக்குங்கள்.
- வேடிக்கையான செயல்பாடுகளை இணைந்து செய்யுங்கள்.
- உங்கள் குழந்தை ஆரோக்கியமானதை தேர்வு செய்யும்போது சாதகமான கருத்துக் கூறுங்கள்.
- சேர்ந்து உணவு உண்ணுங்கள்.
தெளிவான விதிகளை முன்கூட்டியே வகுத்திடுங்கள், எப்போதும் ஒரே நிலைபாட்டில் இருங்கள், வழிகாட்டுதல்களைப் பற்றி அடிக்கடி பேசுங்கள். எல்லைகளை வகுப்பதற்கு:
- உங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து தொடர்ந்து உரையாடுங்கள்.
- உங்கள் விதிகள் எப்போது மீறப்பட்டாலும், நியாயமான மற்றும் நிலையான ஒழுங்கு முறையைப் பயன்படுத்துங்கள்.
- உங்கள் பிள்ளைகள் நண்பர்களுடன் நேர்மறையான உறவைக் கொண்டிருக்க உதவுங்கள்.
- போதைப் பொருள்களை வேண்டாம் என்று சொல்லும் வழிகளைப் பயிற்சி செய்ய உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள்.
உங்கள் பதின்ம வயதினர் என்ன செய்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், யாருடன் நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதை எப்போதும் தெரிந்து வைத்திருங்கள். பாதுகாப்பான மற்றும் வேடிக்கையான செயல்பாடுகளைத் திட்டமிட அவர்களுக்கு உதவுங்கள். இந்த ஐந்து கேள்விகளைக் கேட்க வேண்டும் என நினைவில் கொள்ளுங்கள் :
- எங்கே போகிறாய்?
- என்ன செய்யப் போகிறாய்?
- உன்னுடன் யார் இருப்பார்கள்?
- எப்போது வீடு திரும்புவாய்?
- அங்கே மது, மரியுவானா அல்லது இதர போதைப் பொருட்கள் இருக்குமா?
சிறுவயதிலேயே மது, மரியுவானா மற்றும் இதர போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகள் என்ன?
சிறு வயதிலேயே மது, மரியுவானா, இதர போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால், போதைக்கு அடிமையாதல், உடல்நலப் பிரச்சினைகள், பள்ளியில் தோல்வியடைதல், கைது செய்யப்படுவதாலும் கல்வி இல்லாமல் போவதாலும் பணி வாய்ப்புகள் குறைதல் ஆகிய ஆபத்துகளுக்கு பதின்ம வயதினரை உள்ளாக்கும்:
- பதின்ம வயதினரின் மூளை வளர்ச்சிக்குத் தீங்கு ஏற்படுத்தலாம். உடல் இயக்க ஒத்திசைவு, உணர்ச்சிக் கட்டுபாடு, நினைவுத் திறன், கற்றல், மதிப்பிடுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியை மது, மரியுவானா, இதர போதைப் பொருட்கள் பாதிக்கக்கூடும். பதின்ம வயதினரின் மூளை வளர்ந்து கொண்டிருக்கும் மூளை என்பதால், விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து உண்டு.
- போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கி விடக்கூடும். 15 வயது ஆவதற்கு முன்பே மது அருந்துவோர் பெரியவர்கள் ஆகும்போது மதுவின் பிரச்சினைகளுக்கு ஆளாகும் ஆபத்து நான்கு மடங்கு அதிகம்; 18 வயதுக்கு முன்பே மரியுவானா பயன்படுத்துவோர் மரியுவானா பாதிப்புக் கோளாறுகளுக்கு ஆளாகும் ஆபத்து, தாமதமாகப் பழகுவோருக்கு உள்ளதைவிட ஏழு மடங்கு அதிகம்.
- பதின்ம வயது மரணங்களுக்கான மூன்று காரணங்களுடன் தொடர்புடையது: விபத்துகள் (சாலை விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல்), கொலை, தற்கொலை.
சிறுவயதில் போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்த தகவல்களை அறியுங்கள்.
ஆரோக்கியமான பழக்கங்களை இணைந்து உருவாக்குங்கள்.
உங்கள் பதின்ம வயதினருக்கு ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், இலக்குகளை நிர்ணயிக்கவும், நிலைமையை சமாளிக்க ஆரோக்கியமான வழிகளைப் பயிற்சி செய்யவும் உதவுங்கள்.
- இலக்குகளை நிர்ணயித்தல்: இலக்குகளை அமைப்பது மக்களுக்கு ஒரு நோக்கத்தை அளிக்கிறது, சாதகமான எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ள உதவுகிறது. நிகழ்காலம் சவாலானதாக இருக்கலாம், ஆனால் எதிர்கால வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை இருக்கும்போது அதைக் கையாள்வது எளிது. எதிர்காலத்தில் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி உங்கள் பதின்ம வயதுக் குழந்தைகளுடன் பேசுங்கள், திட்டங்களை வகுக்க அவர்களுக்கு உதவுங்கள்.
- ஆரோக்கியமான வழக்கங்களை உருவாக்குங்கள்: நன்றாக சாப்பிடுவது, போதுமான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடல்நலத்தையும் மனநிலையையும் மேம்படுத்தும். நல்ல பழக்கங்களை எளிதாக்கும் கட்டமைப்பை (வழக்கமான உணவு நேரங்கள் போன்றவை) வழங்குங்கள், ஆரோக்கியமான பழக்கங்கள் ஏன் மிகவும் முக்கியம் என்பதைப் பற்றி உங்கள் பதின்ம வயதினரிடம் பேசுங்கள். நல்ல பழக்கங்களை வலுப்படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் வழிகளை இணைந்து திட்டமிடுங்கள்.
- சமாளிப்புத் திறன்களை வளர்த்தல்: பதின்ம வயதினர் மன அழுத்தமாகவோ அல்லது பதற்றமாகவோ உணரும்போது, தம்மை நன்றாக உணர உதவும் செயல்பாடுகளைக் கண்டறிவது முக்கியம். உங்கள் பதின்ம வயதுக் குழந்தைகளுடன், அந்தச் செயல்களை அவர்களின் வாழ்க்கையில் இணைப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் — அது, கட்டுப்படுத்த முடியாது என்று தோன்றும்போது இரவு உணவிற்குப் பிறகு கொல்லைப்புறத்தில் பந்து விளையாடுவது, வீட்டுக்கு அண்டைப் பகுதியில் ஒரு நடை போவது, அல்லது 10 வரை எண்ணி ஆழ்ந்து சுவாசிப்பது போன்ற எதுவாகவும் இருக்கலாம்.
ஆதரவைப் பெறுங்கள்.
உங்கள் பதின்ம வயதினர் மற்றும் உங்களுக்காக உதவி கேட்பதில் தவறில்லை! கீழே உள்ள அனைத்து ஆதாரவளங்களும் TRS 711 மற்றும் மொழி அணுகல் சேவைகளை வழங்குகின்றன.
- Teen Link என்பது, அழைப்பது, குறுஞ்செய்தி அனுப்புவது அல்லது சாட்டிங் மூலம் பயிற்சி பெற்ற இளைஞர்களை 6 முதல் இரவு 10 மணி வரை (பசிபிக் நேரம்) பதின்ம வயதினர் அணுகக்கூடிய இலவச சேவையாகும், இது அழைப்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியம் காக்கும் சேவையாகும். தங்கள் மனதில் என்ன இருந்தாலும் அதைப்பற்றி உங்கள் குழந்தைகள் பேசலாம். 1-866-TEENLINK (833-6546) என்ற எண்ணுக்கு அழைக்க, குறுஞ்செய்தி அனுப்ப அல்லது சாட் செய்ய உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள். போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் விஷயத்தில் திறமை கொண்ட சிகிச்சையாளருடன் பேச பெரியவர்களும் Teen Link-ஐ அழைக்கலாம். மேலும் தகவல்களுக்கு வலைப்பக்கத்தைப் பாருங்கள் - www.teenlink.org
- Washington Recovery Help Line என்பது, போதைப் பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் மற்றும் மனநலப் பிரச்சினைகளுடன் போராடுபவர்களுக்கு ஆதரவை வழங்குகிற 24 மணிநேர உதவிச் சேவையாகும், இது அழைப்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியம் காக்கும் சேவை. மேலும் அறிய 1-866-789-1511 அழைக்கவும், அல்லது இந்த வலைப்பக்கத்தைப் பார்க்கவும் - WARecoveryHelpLine.org.
- Washington Listens வருத்தம், பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை உணர்கிறவர்களுக்கான ஆதரவு வழங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை (பசிபிக் நேரப்படி) காலை 9 முதல் இரவு 9 வரையிலும், வார விடுமுறை நாட்களில் காலை 9 முதல் 6 வரையிலும் இயங்கும். மேலும் தகவலுக்கு - Washington Listens போர்ட்டலைப் பார்க்கவும்